உறைந்த கடிதம்..

துயிலில்லா இரவுகள்,
புறங்கை தாங்கிய
முகவாய்களுடன்
நீள்கின்றன.
நகம் கடித்தலிலும்
பொழுதுகள் கழியத்தான்
செய்கின்றன.
மௌனம் களைந்து..
உனக்கான எழுத்துகளை,
பேனாவிலென் ரத்தம் ஊற்றி
மேகங்களின் உடலில்
எழுத முயல்கிறேன்.
பேனாவினுள் அதுவும்
உறைந்து நிற்கிறது.
என் காதலைப் போலவே..!
கூடவே கடிதமும்.

-♠ராஜூ♠

உதிரா(ர)க் காதல்..!

உறவுகளனைத்தும் உதிர்ந்து போதும்,
நீ மட்டும் மறக்க மறுக்கிறாய்
என் காதலெழுந்து தாண்டவமாட.
எனக்கு கடந்த காலமே இல்லையென
கண்ணீர் கொண்டு நுரை பொங்க
அழுத்தித் துடைத்தெறிந்தும்.

என் மனதைக் கொய்யும்
வாலிப வாசனைகளோடு
கூடிய நினைவுகளுடன்
நீ நகர்ந்து செல்கிறாய்.
மனச்சுவரின் குறுக்கே ஓடியோடி
ஒளிந்து விளையாடுகிறாய்.

விசாரணைகளின்றி நீ
கொடுத்த சொற் தண்டனைகளின்
பெயரில் ஏற்பட்ட வடுக்களில்
வலியெனும் குறுக்கு விசாரணைகள்
இன்றளவும் இருக்கின்றன.

வக்கீல் வேண்டாம் வாதாட,
என் காதல் உள்ளது.காலத்தின்
தீர்ப்பை வெல்ல..
உன்னுடையதையும்..!
-♠ராஜூ♠