தேவதைக் கனவு
நீ என்னை பார்க்க வேண்டாம்,உன் நிழலையாவது
என் மீது விழும்படி செய்துவிட்டு போ..
நீ வரையும் வரை அழகாய் தெரியும் கோலம்,
நீ எழுந்து போன பின் அழகு இழக்கிறது..
குழந்தைகளின் கனவில் தேவதைகள் வருமாமே..
அதனால் தான் எல்லாக் குழந்தைகளும்
உன்னிடம் உடனே ஒட்டிக் கொள்கின்றனவா?
மருத்துவமனையில்
நீ பிறந்த அறை எதுவென்று
தெரிந்தால் சொல்..
என் காதல் தேசத்து கடவுள் பிறந்த இடத்துக்கு
புனித யாத்திரை சென்று வருகிறேன்..
எனக்கு மட்டும் சக்தி இருந்தால்,
நீ சின்ன வயதில் பிடித்து விளையாடிய
பட்டாம்பூச்சியாய் மாறியிருப்பேன்...
நீ கோவில்களுக்கெல்லாம் அடிக்கடி போகாதே..
தேவர்களோடெல்லாம்
என்னால் போட்டி போட முடியாது...
இலையுதிர்கால மரங்கள் கூட
நீ நின்றால் பூ உதிர்க்கின்றன..
ஏன் குடை பிடித்தாய்?
பார்! கோபத்தில் சூரியன் எங்களை சுடுகிறது...
நான் என்ன அவ்வளவு அழகா என்று உதடு சுளித்தாய்...
இன்னும் கொஞ்சம் அழகு கூடி விட்டிருந்தது...
அழகு சாதனப் பொருட்களின்
விளம்பரங்களையும், அழகிப் போட்டிகளையும்,
பார்க்கும் பொழுதெல்லாம்
நீ என்ன நினைப்பாயோ எனக்கு தெரியாது..
நான் ஏளனமாக உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறேன்..