காதலிக்க கற்றுக்கொடுடி!!

புத்தகத்தில் எழுதியிருந்த
என் பெயரின் முன்னால்
உன் பெயரை எழுதி
காதலை சொன்னாயே !!
அந்த நுணுக்கத்தை...
ஊரெல்லாம்
வாயாடி என
பெயரெடுத்து விட்டு
என் தாயிடம் மட்டும்
நல்ல பெண் ஆனாயே !!
அந்த வித்தையை...
உன் வீட்டில்
எல்லாரும் இருக்கையிலும்,
பயப்படாமல் என்னையே
பார்த்துக் கொண்டிருப்பாயே !!
அந்த தைரியத்தை...
என்னோடு வருவதற்காகவே
உன் சைக்கிளை
பஞ்சர் செய்வாயே !!
அந்த திருட்டுத்தனத்தை..
உன் அப்பாவோடு நான்
பேசி கொண்டிருக்கையில்
அவருக்கு பின்னால் நின்று
உதடு குவித்து கொஞ்சுவாயே!!
அந்த குறும்பை..
உனக்கு பிடித்த மஞ்சளை தவிர்த்து
எனக்கு பிடித்த நீலத்திலேயே
அதிகம் உடுத்துகிறாயே!!
அந்த ஆசையை ...
என் வீட்டு பூனைக்குட்டி
உன்னிடம் மட்டும்
அதிகம் ஒட்டிக் கொள்கிறதே!!
அந்த விந்தையை...
என்னோடு எதற்கோ
சண்டை போட்டு,
இரவு முழுக்க அழுது விட்டு,
அடுத்த நாள் காலையில்
சிவந்த கண்களோடு 'சாரிடா' என்றாயே !!
அந்த அன்பை..
நான் சாப்பிடும் போது
யாருக்கும் தெரியாமல்
ஒடி வந்து, என்னை
ஊட்டி விட சொல்வாயே !!
அந்த பிரியத்தை..
எனக்கு
உடம்பு சரியில்லாத போது
இரண்டு நாள் முழுதும்
சாப்பிடாமல் இருந்தாயே!!
அந்த பாசத்தை..
எனக்கும் கொஞ்சம்
சொல்லிக்கொடடி கண்ணம்மா..
நானும்
காதலிக்க கற்றுக்கொள்கிறேன்..
காதலுடன்,