காதலிக்க கற்றுக்கொடுடி!!


புத்தகத்தில் எழுதியிருந்த
என் பெயரின் முன்னால்
உன் பெயரை எழுதி
காதலை சொன்னாயே !!
அந்த நுணுக்கத்தை...


ஊரெல்லாம்
வாயாடி என
பெயரெடுத்து விட்டு
என் தாயிடம் மட்டும்
நல்ல பெண் ஆனாயே !!
அந்த வித்தையை...


உன் வீட்டில்
எல்லாரும் இருக்கையிலும்,
பயப்படாமல் என்னையே
பார்த்துக் கொண்டிருப்பாயே !!
அந்த தைரியத்தை...


என்னோடு வருவதற்காகவே
உன் சைக்கிளை
பஞ்சர் செய்வாயே !!
அந்த திருட்டுத்தனத்தை..


உன் அப்பாவோடு நான்
பேசி கொண்டிருக்கையில்
அவருக்கு பின்னால் நின்று
உதடு குவித்து கொஞ்சுவாயே!!
அந்த குறும்பை..


உனக்கு பிடித்த மஞ்சளை தவிர்த்து
எனக்கு பிடித்த நீலத்திலேயே
அதிகம் உடுத்துகிறாயே!!
அந்த ஆசையை ...


என் வீட்டு பூனைக்குட்டி
உன்னிடம் மட்டும்
அதிகம் ஒட்டிக் கொள்கிறதே!!
அந்த விந்தையை...


என்னோடு எதற்கோ
சண்டை போட்டு,
இரவு முழுக்க அழுது விட்டு,
அடுத்த நாள் காலையில்
சிவந்த கண்களோடு 'சாரிடா' என்றாயே !!
அந்த அன்பை..


நான் சாப்பிடும் போது
யாருக்கும் தெரியாமல்
ஒடி வந்து, என்னை
ஊட்டி விட சொல்வாயே !!
அந்த பிரியத்தை..


எனக்கு
உடம்பு சரியில்லாத போது
இரண்டு நாள் முழுதும்
சாப்பிடாமல் இருந்தாயே!!
அந்த பாசத்தை..


எனக்கும் கொஞ்சம்
சொல்லிக்கொடடி கண்ணம்மா..
நானும்
காதலிக்க கற்றுக்கொள்கிறேன்..
காதலுடன்,

காதல் வளர்த்தேன்..உன் ஒவ்வொரு செய்கையிலும்
என் காதல் வளர்கிறது..
நீ நெற்றி முடி ஒதுக்கையில்
நூறு மடங்காய்..

********
மணிக்கணக்கில் யோசித்தும்
எழுத முடியவில்லை..
லேசாய் தலைசாய்த்து
ஓரக்கண்ணால் பார்ப்பாயே
அதற்கு இணையான கவிதையை..

*********
இதயம் துடிப்பது நின்றால்
எனக்கு மரணம் நிகழுமா தெரியாது
உன்னை நினைப்பது நின்றால்
மறுகணம் மரணம் நிகழும்!!

********

நீ பிடிக்கும் போது மட்டும்
தானாக வந்து சிக்கி கொள்கின்றன
பட்டாம் பூச்சிகள்..

********
'நான் என்ன அவ்வளவு
அழகாவா இருக்கிறேன்?' என்கிறாய்
பாவம் உனக்கெப்படி தெரியும்
கண்ணாடி கூட
கால்பங்கு தானே காட்டுகிறது
உன் அழகை!!

*******
தலைக்கணத்தோடு திரிகிறது
உன் மடியில் தினமும் துயிலும்
பூனைக்குட்டி..

*********

அழகு,
பேரழகு,
இந்த வார்த்தைகளின்
Superlative நீ!!

*********
நீதான் அழகி என்று
கர்வம் கொள்ளாதே!
உன்னை ஜெயிக்க பிறப்பாள்
நம் மகள்!!

*********

காதலுடன்,

அழகுக்கு மறுபெயர் நீதானே..உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்
பிரம்மனிடம் கோவிக்கிறார்கள்..
ஏன் இப்படி ஒரு அழகியை
தேவலோகத்தில் படைக்கவில்லையென...
*********

நீ சோம்பல் முறிக்கும்
அழகை பார்க்கவே தினம்
சீக்கிரம் உதிக்கிறான்
சூரியன்.

*****

இறந்த செல்கள் தான்
நகமாக வளருமாம்..
நீ நகம் கொறிக்கையில்
இறந்த செல்கள் உயிர் பெறுகின்றன..

*****
இந்தியாவில் வசந்தகாலம்
பிப்ரவரி மாதத்திலாம்..
இருக்காதா பின்னே
நீ பிறந்தது பிப்ரவரி 19.


*****

என் வலது கண்ணில்
விழுந்த தூசியை ஊதினாய் நீ..
பொறாமையில் அழுகிறது
என் இடது கண்..

******

நிலவு பூமியை சுற்றுகிறதா,
இல்லவே இல்லை...
பூமியில் இருக்கும்
உன்னைத்தானே சுற்றுகிறது..

*******
காதலுடன்,

பிரிவின் வலி ..உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது..


பின் இரவு நேரங்களில் அது
பேயாட்டம் ஆடுகிறது..


ஆழ் மனதில் அடுக்கி வைத்திருக்கும்
உன் நினைவுகளை கலைத்து போடுகிறது..


உன் வாசனையை, அறை எங்கும்
நிரப்பி மாயாஜாலம் செய்கிறது..


காதல் வலியால் துடிப்பதை
குரூரமாய் பார்த்து சிரிக்கிறது..


பயந்த குழந்தையாய் போர்த்தி படுக்கையில்,
பக்கத்தில் படுத்து கட்டி கொள்கிறது உன் பிரிவும்.


கண்ணை மூடி தூங்க முனைகையில்,
காதல் கதைகளை உரக்க பேசுகிறது.


சிவந்த விழிகளோடு காலையில் பார்க்கையில்,
சாதுவாய் தூங்கி கொண்டிருக்கிறது அது.


அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என
அறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.


உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது...
***************

கண்ணீருடன்,


தேவதை வம்சம் நீயே..


வருடம் முழுவதும்
பூக்கிறது
நீ
ஊஞ்சல் ஆடிய மரம்..

**********

என்ன பாவம் செய்தோம் என்று
புலம்புகின்றன
நீ
சாப்பிடாமல் வைத்த
பருக்கைகள்..
**********

நான்கு வயதில் ஒருநாள்
தூக்கத்தில் சிரித்து கொண்டே
இருந்தேனாம்..


அன்று தான் நீ பிறந்திருப்பாய்!!

************

முதல் பக்கத்தில் எழுதியிருந்த
உன் பெயரை மட்டுமே
தினமும் படிக்கிறேன் ..

உன்னிடம்
இரவல் வாங்கிய புத்தகத்தில்...

***********

கடவுளின் விஸ்வரூபம்
போல்
காதலின் விஸ்வரூபம்
நீ !

**********

எல்லா கவிதை போட்டிகளிலும்
உன் பெயரை மட்டுமே
எழுதி வைத்து விட்டு
வருகிறேன் நான்..

கவிதை போட்டியில்
காவியம் எழுத கூடாதென
பரிசு தர மறுக்கிறார்கள்..

************

காதலுடன்,