நெஞ்சமெல்லாம் காதல்..தமிழை செம்மொழி என்று
அறிவித்திருக்கிறார்களாம்..
நீ பேசுவதை கேட்டிருந்தால்
தமிழை தேன் மொழி என்றிருப்பார்கள்..

*******

காய்ச்சலடிக்கிறதா என்று
நெற்றியில் கை வைத்தாய்..
காய்ச்சல் போய், இப்போ 
காதலடிக்கிறது..

********உன் பெயரிலில்லுள்ள
அந்த
மூன்று உயிர்மெய்யெழுத்தும் தான்
மெய்யாலுமே
உயிர் உள்ள எழுத்து..

*******

இப்பொழுதுதான்
பார்க்கிறேன்..
ஒரு குமுதம்,
விகடன் படிப்பதை..

******

உலகின் மென்மையான
ஆயுதம்
உன் உதடுகள் தான்..

******

ஒவ்வொரு முறை
உன்னோடு பேசி முடித்து
போனை வைக்கும் போதும்,
இன்னும் ஏதோ ஒன்று
மிச்சமிருக்கிறது..

அத்தைக்கு பிறந்தவளே..


அத்தை பொண்ணு / மாமா பொண்ணு இதெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா நெஜத்துல ரொம்ப கொடுமை அது. அதுவும் அவங்க கொஞ்சம் அழகா இருந்துட்டா போதும். அவங்க பண்ற அலப்பறை தாங்க முடியாது. அதுக்காக அவங்கள நாம லூஸ்ல விடவும் முடியாது. அவங்க பண்ற கொடுமைகளை தாங்கித்தான் ஆகணும்.
  • தனியா இருக்கும் போது கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா நம்ம வீட்டு பெரியவங்க முன்னாடி 'நான் ரொம்ப நல்லவன்' ன்னு காட்டறதுக்காக நாம ஒரு ஓரமா நிக்கும் போது தானா வந்து தோள்ல கை போடறது, முதுகுல அடிக்கறதுன்னு நம்மை நெளிய வைப்பாங்க..
  • எனக்கு அவசரமா ஒரு 50 ரூபா டாப் அப் போட்டுடான்னு சொல்லிட்டு கட் பண்ணிருவாங்க.. மிஸ்டு கால் கொடுக்க கூட காசில்லாம நம்ம பொருளாதாரம் இருக்கும்..
  • தப்பி தவறி நம்ம மொபைல் அவங்க கைல கெடச்சுட்டா அவ்ளோதான்.. ரொம்ப நாள் கஷ்டப்பட்டு, SMS அனுப்பற அளவுக்கு கரெக்ட் பண்ணி வச்சுருக்கற பிகர், இனிமேல் நம்ம பேரை கேட்டாலே காரி துப்பர அளவுக்கு பண்ணிடுவாங்க..
  • காலங்காத்தால போன் பண்ணி "எனக்கு ரிசல்ட் வந்துருச்சாமா.. பாத்து சொல்லுன்னு.." கொல்லுவாங்க.. நம்ம ரிசல்ட்டயே நாலு நாள் கழிச்சு பாக்கற நாம, அவ கிளாஸ் புல்லா எல்லாரோட ரிசல்ட்டையும் லைவ் கமெண்டரி பண்ண வேண்டிய நிலைமை வரும்.
  • வில்லு படம் சூப்பரா இருக்காமா.. டிவிடி வாங்கி கொடுன்னு கொடுமை படுத்துவாங்க.. வில்லு டிவிடி இருக்கான்னு கேட்டா திருட்டு விசிடி விக்கறவன் கூட நம்மளை திருதிருன்னு பார்ப்பான்..
  • சரி நம்ம மேல இவ்வளோ உரிமையா இருக்காளே, நம்மள லவ் பண்ணுவாளோன்னு கற்பனை குதிரைல ஏறும் போது, 'என் கிளாஸ் மேட் ஒருத்தன் சூர்யா மாதிரியே இருப்பான் தெரியுமான்னு' குண்ட தூக்கி குதிரை கால்லயே போடுவாங்க..
  • வீட்டுக்கு காய்கறி வாங்க கடைக்கு போறத கூட கௌரவ கொறச்சலா நெனைக்கற நம்மள அப்பப்ப டிரைவராகவும், பாடி கார்டாகவும் யூஸ் பண்ணுவாங்க..
இப்படி அத்தை பெத்த அழகிய ராட்சசிகள் பண்ற அன்புத் தொல்லைகள் ஏராளம். என்னதா கொடுமை பண்ணினாலும், 'போடா லூசுன்னு' அவ செல்லமா அடிக்கும் போது கிடைக்கற சுகம் இருக்கே.. அதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்..


***********************************


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு. எனது இன்னொரு வலைப்பூவான அச்சம் தவிரில் சில மாதங்களுக்கு முன் எழுதியது. இங்கே ரொம்ப நாளா கடை காலியா இருக்கறதால இங்கே எழுதி இருக்கேன்.. பொறுத்தருளவும்...

பிரிவையும் நேசிக்கிறேன்..


உன்
பெயரை,

உன் பரிசத்தை,

உன் பெண்மையை,

உன் அருகாமையை,

உன் அழகை,

உன் அதட்டலை,

உன் அன்பை,

உன் வார்த்தையை,

உன் வசீகரத்தை,

உன் நிழலை,

உன் நாணத்தை,

உன் வாசத்தை,

உன் சுவாசத்தை ,

உன் கோபத்தை,

உன் கொஞ்சலை,

உன் நடையை,

உன் நளினத்தை,

உன் மச்சத்தை,

உன் முத்தத்தை,

எல்லாவற்றையும் நேசித்திருக்கையில்
காதலை உணர்ந்தேன்..


இப்போது உன் பிரிவையும் நேசிக்கிறேன்..
சாதலை உணர்கிறேன்..

வார்த்தை தவறிவிட்டாய்...


இதுதான் உலகமென
புரிந்த வயதிலிருந்து
நீ தான் வாழ்க்கையென
வாழ்ந்திருந்தேன்..


அழகும் நீதான்,
எனக்கு தெரிந்த ஒரே
அழகியும் நீதான் என
கவிதைகள் எழுதி வந்தேன்..


ஆசை குழந்தைகளோடு
அன்பாய் வாழ்வதாய்
நிதம் ஒரு சொப்பனம்
கண்டு வந்தேன்..


காலமெல்லாம் உன்னை
கைப்பிடிப்பேன் என்றெண்ணி
கண்ணும் கருத்துமாய்
காதலை வளர்த்தேன்..


கனவு கை கூடுமென
நினைத்திருக்கையில்
கல்யாண மாலையோடு நிற்கிறாய்
மாற்றானோடு..


இது தான் விதியென
ஏற்றுக்கொள்ளலாம்..
இன்னார்க்கு இன்னார் என
எழுதியிருப்பதாய் தேற்றிக் கொள்ளலாம்..


ஆனால்
அம்மாவை கேட்டு அழும்
நம் கனவு குழந்தைகளுக்கு இனி
என்ன பதில் சொல்வேன் ..

காதலிக்க கற்றுக்கொடுடி!!


புத்தகத்தில் எழுதியிருந்த
என் பெயரின் முன்னால்
உன் பெயரை எழுதி
காதலை சொன்னாயே !!
அந்த நுணுக்கத்தை...


ஊரெல்லாம்
வாயாடி என
பெயரெடுத்து விட்டு
என் தாயிடம் மட்டும்
நல்ல பெண் ஆனாயே !!
அந்த வித்தையை...


உன் வீட்டில்
எல்லாரும் இருக்கையிலும்,
பயப்படாமல் என்னையே
பார்த்துக் கொண்டிருப்பாயே !!
அந்த தைரியத்தை...


என்னோடு வருவதற்காகவே
உன் சைக்கிளை
பஞ்சர் செய்வாயே !!
அந்த திருட்டுத்தனத்தை..


உன் அப்பாவோடு நான்
பேசி கொண்டிருக்கையில்
அவருக்கு பின்னால் நின்று
உதடு குவித்து கொஞ்சுவாயே!!
அந்த குறும்பை..


உனக்கு பிடித்த மஞ்சளை தவிர்த்து
எனக்கு பிடித்த நீலத்திலேயே
அதிகம் உடுத்துகிறாயே!!
அந்த ஆசையை ...


என் வீட்டு பூனைக்குட்டி
உன்னிடம் மட்டும்
அதிகம் ஒட்டிக் கொள்கிறதே!!
அந்த விந்தையை...


என்னோடு எதற்கோ
சண்டை போட்டு,
இரவு முழுக்க அழுது விட்டு,
அடுத்த நாள் காலையில்
சிவந்த கண்களோடு 'சாரிடா' என்றாயே !!
அந்த அன்பை..


நான் சாப்பிடும் போது
யாருக்கும் தெரியாமல்
ஒடி வந்து, என்னை
ஊட்டி விட சொல்வாயே !!
அந்த பிரியத்தை..


எனக்கு
உடம்பு சரியில்லாத போது
இரண்டு நாள் முழுதும்
சாப்பிடாமல் இருந்தாயே!!
அந்த பாசத்தை..


எனக்கும் கொஞ்சம்
சொல்லிக்கொடடி கண்ணம்மா..
நானும்
காதலிக்க கற்றுக்கொள்கிறேன்..
காதலுடன்,

காதல் வளர்த்தேன்..உன் ஒவ்வொரு செய்கையிலும்
என் காதல் வளர்கிறது..
நீ நெற்றி முடி ஒதுக்கையில்
நூறு மடங்காய்..

********
மணிக்கணக்கில் யோசித்தும்
எழுத முடியவில்லை..
லேசாய் தலைசாய்த்து
ஓரக்கண்ணால் பார்ப்பாயே
அதற்கு இணையான கவிதையை..

*********
இதயம் துடிப்பது நின்றால்
எனக்கு மரணம் நிகழுமா தெரியாது
உன்னை நினைப்பது நின்றால்
மறுகணம் மரணம் நிகழும்!!

********

நீ பிடிக்கும் போது மட்டும்
தானாக வந்து சிக்கி கொள்கின்றன
பட்டாம் பூச்சிகள்..

********
'நான் என்ன அவ்வளவு
அழகாவா இருக்கிறேன்?' என்கிறாய்
பாவம் உனக்கெப்படி தெரியும்
கண்ணாடி கூட
கால்பங்கு தானே காட்டுகிறது
உன் அழகை!!

*******
தலைக்கணத்தோடு திரிகிறது
உன் மடியில் தினமும் துயிலும்
பூனைக்குட்டி..

*********

அழகு,
பேரழகு,
இந்த வார்த்தைகளின்
Superlative நீ!!

*********
நீதான் அழகி என்று
கர்வம் கொள்ளாதே!
உன்னை ஜெயிக்க பிறப்பாள்
நம் மகள்!!

*********

காதலுடன்,

அழகுக்கு மறுபெயர் நீதானே..உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்
பிரம்மனிடம் கோவிக்கிறார்கள்..
ஏன் இப்படி ஒரு அழகியை
தேவலோகத்தில் படைக்கவில்லையென...
*********

நீ சோம்பல் முறிக்கும்
அழகை பார்க்கவே தினம்
சீக்கிரம் உதிக்கிறான்
சூரியன்.

*****

இறந்த செல்கள் தான்
நகமாக வளருமாம்..
நீ நகம் கொறிக்கையில்
இறந்த செல்கள் உயிர் பெறுகின்றன..

*****
இந்தியாவில் வசந்தகாலம்
பிப்ரவரி மாதத்திலாம்..
இருக்காதா பின்னே
நீ பிறந்தது பிப்ரவரி 19.


*****

என் வலது கண்ணில்
விழுந்த தூசியை ஊதினாய் நீ..
பொறாமையில் அழுகிறது
என் இடது கண்..

******

நிலவு பூமியை சுற்றுகிறதா,
இல்லவே இல்லை...
பூமியில் இருக்கும்
உன்னைத்தானே சுற்றுகிறது..

*******
காதலுடன்,

பிரிவின் வலி ..உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது..


பின் இரவு நேரங்களில் அது
பேயாட்டம் ஆடுகிறது..


ஆழ் மனதில் அடுக்கி வைத்திருக்கும்
உன் நினைவுகளை கலைத்து போடுகிறது..


உன் வாசனையை, அறை எங்கும்
நிரப்பி மாயாஜாலம் செய்கிறது..


காதல் வலியால் துடிப்பதை
குரூரமாய் பார்த்து சிரிக்கிறது..


பயந்த குழந்தையாய் போர்த்தி படுக்கையில்,
பக்கத்தில் படுத்து கட்டி கொள்கிறது உன் பிரிவும்.


கண்ணை மூடி தூங்க முனைகையில்,
காதல் கதைகளை உரக்க பேசுகிறது.


சிவந்த விழிகளோடு காலையில் பார்க்கையில்,
சாதுவாய் தூங்கி கொண்டிருக்கிறது அது.


அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என
அறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.


உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது...
***************

கண்ணீருடன்,


தேவதை வம்சம் நீயே..


வருடம் முழுவதும்
பூக்கிறது
நீ
ஊஞ்சல் ஆடிய மரம்..

**********

என்ன பாவம் செய்தோம் என்று
புலம்புகின்றன
நீ
சாப்பிடாமல் வைத்த
பருக்கைகள்..
**********

நான்கு வயதில் ஒருநாள்
தூக்கத்தில் சிரித்து கொண்டே
இருந்தேனாம்..


அன்று தான் நீ பிறந்திருப்பாய்!!

************

முதல் பக்கத்தில் எழுதியிருந்த
உன் பெயரை மட்டுமே
தினமும் படிக்கிறேன் ..

உன்னிடம்
இரவல் வாங்கிய புத்தகத்தில்...

***********

கடவுளின் விஸ்வரூபம்
போல்
காதலின் விஸ்வரூபம்
நீ !

**********

எல்லா கவிதை போட்டிகளிலும்
உன் பெயரை மட்டுமே
எழுதி வைத்து விட்டு
வருகிறேன் நான்..

கவிதை போட்டியில்
காவியம் எழுத கூடாதென
பரிசு தர மறுக்கிறார்கள்..

************

காதலுடன்,

யார் இந்த தேவதை...


தேவதைகள்
எப்போதும்

வெள்ளை
மட்டுமே
அணிவதில்லை
..

நீ
இன்று மஞ்சள் தாவணியில்..

*********
தினமும் நீ
என்ன நிறத்தில்
உடுத்தியிருக்கிறாய் என்பதை
ஆவலோடு பார்க்கிறேன்..

அன்றைய 'அதிர்ஷ்டக்கார' நிறத்தை தெரிந்து கொள்ள..

***********
நீ கண்ணம் வைத்து
பேசும் சுகத்துக்காகவே,
ஒரு ரூபாயில்
மணிக்கணக்கில் இயங்குகிறது

கடை வீதி 'காயின் பாக்ஸ்'..

********

பலருக்கு வரத்தால்
குழந்தை பிறக்கும்..
வரமே குழந்தையாய் பிறந்தது
உன் பெற்றோருக்குத்தான்..

********

எடுத்து வீசிய
பின்
தான் வாடியது,
நீ தலையில் வைத்திருந்த
ரோஜா பூ..

********

நீ
கோவிலுக்கு வருவாய் என,
வெள்ளிக்கிழைமை தோறும்
சிறப்பு அலங்காரம்
செய்து கொள்கிறது சாமி..

*******

நீ 'ச்சே' என்று
சலித்து கொண்டு
மணி பார்க்கும் அழகுக்காகவே
உன் கல்லூரி பேருந்து
தினமும் தாமதமாக வர
வேண்டிக் கொள்கிறோம்

நானும் உன் கை கடிகாரமும்..

*******
மாமல்லபுர சிற்பங்கள்
எல்லாம் உன் சாயலில்..
உண்மையை சொல்
போன ஜென்மத்தில்
பல்லவன் ராஜ்ஜியத்தில் பிறந்தாயா??

********
எல்லா ரோஜா செடிகளும்,
மஞ்சள் நிறத்திலேயே பூக்கின்றன..
உனக்கு
மஞ்சள் ரோஜா தான்
பிடிக்கும் என
ஏன் சொன்னாய்??

********

யார் கண்டார்?
உன் வீடு
கிழக்கு நோக்கி இருப்பதால் தான்
கதிரவன் தினமும்
கிழக்கில் உதிக்கிறானோ என்னவோ??
*********

காதலுடன்,

உன் பேர் சொல்ல ஆசைதான்..


ங்கீதமாய்,
ம்யமாய்,
பெண்மையாய்,
யாழிசையாய் இருக்கிறது
உன் பெயர்..

அடைக்கலம் தருபவள் என்று
அர்த்தமாம் உன் பெயருக்கு..
அதை உண்மையாக்கு
என் காதலுக்கு அடைக்கலம் கொடுத்து..


என் பெயரை
யாராவது கேட்டால் கூட
உன் பெயரை சொல்லி
அசடு வழிகிறேன்..

எந்த மொழியில் எழுதினாலும்
அழகாய்த்தான் இருக்கிறது
உன் பெயர்..

உன் பெயரை சொல்லி
யாராவது அழைத்தால்
உனக்கு முன்னால் திரும்புகிறேன்
அனிச்சையாய் நான்..

அழகு குழந்தைகளை
பார்க்கும் பொழுதெல்லாம்
உன் பேர் சொல்லியே கொஞ்சுகிறேன்..
என்னையுமறியாமல்..

உன் பெயர் தாங்கிய
சாலையோர பெயர் பலகைகள் மட்டும்
அதிகமாய் மிளிர்கின்றன..

காத்திருக்கிறேன்..
எப்போது வெளிவரும்?
உன்பெயரில் தொடங்கும் திரைப்பாடல்!

கவிதை ஒன்று எழுத நினைத்து
காகிதம் பல கசக்கி, கடைசியில்
உன் பெயர் மட்டும் எழுதி முடிக்கிறேன்,
காவியம் எழுதிய திருப்தியில்..

காதல் மழை...

காதலிப்பவர்கள்
சொர்க்கத்தை அடைவார்கள்..
காதலிக்கப்படுபவர்கள்
சொர்க்கத்தை உணர்வார்கள்..

**************

கலைந்து போன ஒரு மேகத்தின் கண்ணீர் துளி இந்த காதல் மழை..
நனைவோம் வாருங்கள்..