தேவதைக் கனவு


நீ என்னை பார்க்க வேண்டாம்,
உன் நிழலையாவது
என் மீது விழும்படி செய்துவிட்டு போ..


நீ வரையும் வரை அழகாய் தெரியும் கோலம்,
நீ எழுந்து போன பின் அழகு இழக்கிறது..


குழந்தைகளின் கனவில் தேவதைகள் வருமாமே..
அதனால் தான் எல்லாக் குழந்தைகளும்
உன்னிடம் உடனே ஒட்டிக் கொள்கின்றனவா?



மருத்துவமனையில்
நீ பிறந்த அறை எதுவென்று
தெரிந்தால் சொல்..
என் காதல் தேசத்து கடவுள் பிறந்த இடத்துக்கு
புனித யாத்திரை சென்று வருகிறேன்..



எனக்கு மட்டும் சக்தி இருந்தால்,
நீ சின்ன வயதில் பிடித்து விளையாடிய
பட்டாம்பூச்சியாய் மாறியிருப்பேன்...



நீ கோவில்களுக்கெல்லாம் அடிக்கடி போகாதே..
தேவர்களோடெல்லாம்
என்னால் போட்டி போட முடியாது...



இலையுதிர்கால மரங்கள் கூட
நீ நின்றால் பூ உதிர்க்கின்றன..



ஏன் குடை பிடித்தாய்?
பார்! கோபத்தில் சூரியன் எங்களை சுடுகிறது...



நான் என்ன அவ்வளவு அழகா என்று உதடு சுளித்தாய்...
இன்னும் கொஞ்சம் அழகு கூடி விட்டிருந்தது...



அழகு சாதனப் பொருட்களின்
விளம்பரங்களையும், அழகிப் போட்டிகளையும்,
பார்க்கும் பொழுதெல்லாம்
நீ என்ன நினைப்பாயோ எனக்கு தெரியாது..
நான் ஏளனமாக உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறேன்..



சாட்சி!

சிந்தை நிறைத்து
வாலிபம் ஊடுருவும்
கருவ‌றையின்
பெருஞ்சுவரில்

மோதி,மோதியென்
குருதி இழக்கிறேன்.
இன்னதென‌ச் சொல்ல‌
முடியா வண்ணத்தில்
இருந்ததென் குருதி.

சுவரைக் குருதியின்
நிறம் கவரத்
தொடங்கிய கணத்தின்
முடிவில்,

என்னுள் நீயில்லை.

உன்னை அழைத்துச்
செல்ல,அவ்வறை
நோக்கி வந்த
காற்றுக்கு சாட்சியாய்
சிறகடிக்ககிறது,
படுக்கையில் உதிர்ந்த
உன்
ஒற்றைக் குழல்.

-♠ராஜூ♠

தேடல்..

மனப் பாலையின்
சுடுமணல்
பாதச் சுவடுகளில்
எங்கிருக்கிறது எனக்கான
கொலுசு
அணிந்த பாதத்தின்
சுவடு.

மழை
கொண்டு போயிருக்கலாம்.
காற்றினால்
சிதறியிருக்கலாம்.
எதுவாகினும்,
மீட்டெடுக்க முடியாத
தருணங்களின்
தொகுப்புதான் காதல்!

-ராஜூ

முத்தப் பிசுபிசுப்பு..

இலக்கையடைந்த கப்பலின்
நங்கூரப் பாய்ச்சலினுடைய
அதிர்வுகள் கடலினுள்ளிருந்து
மேலேறி ஒலிக்கும் வெளியில்,
மிதந்து வந்தது அன்றவள்
அனுப்பிய முத்தமொன்று.

இராஜாளிப் பறவையின்
அலகையொத்தென்
அதரங்கள் குவித்து
நான் அனுப்பிய முத்தத்தின்
பயணம் அமைந்ததுமதை
நோக்கியே.

இவ்விரண்டும் இணைந்த
தருவாயில், ஆகாயம்
கிழிந்து பொழிந்தது
ஆலங்கட்டி மழை.

மழையின் வாசமடங்கிய
பிறகான வளியில்,
இன்னமும்
முத்த எச்சிலின் நெடி
கலந்த பிசுபிசுப்பானது
காதலாய்
கனந்து கொண்டிருக்கிறது.
-♠ராஜூ♠

துளியில் சிதறிய முகம்!

வானமுடைந்துத் தெறித்த திரவத்
துகள்களென் தலை தொட,
கேசம் விட்டு நாசி நுனி வந்த
துளியொன்று நிலம் நனைத்த
நாளில்தான் மறைந்து போனாளவள்!

கண்ணுயர்த்தி நிமிர்ந்த போது,முகம்
தொட்டுச் சிதறியதோர் துளியில்
அவளின் முகம்!

இப்போது நிலம் விழுந்த துளி,
நில நாக்கை உவர்க்கச் செய்திருக்கலாம்.

-♠ராஜூ♠

உறைந்த கடிதம்..

துயிலில்லா இரவுகள்,
புறங்கை தாங்கிய
முகவாய்களுடன்
நீள்கின்றன.
நகம் கடித்தலிலும்
பொழுதுகள் கழியத்தான்
செய்கின்றன.
மௌனம் களைந்து..
உனக்கான எழுத்துகளை,
பேனாவிலென் ரத்தம் ஊற்றி
மேகங்களின் உடலில்
எழுத முயல்கிறேன்.
பேனாவினுள் அதுவும்
உறைந்து நிற்கிறது.
என் காதலைப் போலவே..!
கூடவே கடிதமும்.

-♠ராஜூ♠

உதிரா(ர)க் காதல்..!

உறவுகளனைத்தும் உதிர்ந்து போதும்,
நீ மட்டும் மறக்க மறுக்கிறாய்
என் காதலெழுந்து தாண்டவமாட.
எனக்கு கடந்த காலமே இல்லையென
கண்ணீர் கொண்டு நுரை பொங்க
அழுத்தித் துடைத்தெறிந்தும்.

என் மனதைக் கொய்யும்
வாலிப வாசனைகளோடு
கூடிய நினைவுகளுடன்
நீ நகர்ந்து செல்கிறாய்.
மனச்சுவரின் குறுக்கே ஓடியோடி
ஒளிந்து விளையாடுகிறாய்.

விசாரணைகளின்றி நீ
கொடுத்த சொற் தண்டனைகளின்
பெயரில் ஏற்பட்ட வடுக்களில்
வலியெனும் குறுக்கு விசாரணைகள்
இன்றளவும் இருக்கின்றன.

வக்கீல் வேண்டாம் வாதாட,
என் காதல் உள்ளது.காலத்தின்
தீர்ப்பை வெல்ல..
உன்னுடையதையும்..!
-♠ராஜூ♠