முத்தப் பிசுபிசுப்பு..

இலக்கையடைந்த கப்பலின்
நங்கூரப் பாய்ச்சலினுடைய
அதிர்வுகள் கடலினுள்ளிருந்து
மேலேறி ஒலிக்கும் வெளியில்,
மிதந்து வந்தது அன்றவள்
அனுப்பிய முத்தமொன்று.

இராஜாளிப் பறவையின்
அலகையொத்தென்
அதரங்கள் குவித்து
நான் அனுப்பிய முத்தத்தின்
பயணம் அமைந்ததுமதை
நோக்கியே.

இவ்விரண்டும் இணைந்த
தருவாயில், ஆகாயம்
கிழிந்து பொழிந்தது
ஆலங்கட்டி மழை.

மழையின் வாசமடங்கிய
பிறகான வளியில்,
இன்னமும்
முத்த எச்சிலின் நெடி
கலந்த பிசுபிசுப்பானது
காதலாய்
கனந்து கொண்டிருக்கிறது.
-♠ராஜூ♠

துளியில் சிதறிய முகம்!

வானமுடைந்துத் தெறித்த திரவத்
துகள்களென் தலை தொட,
கேசம் விட்டு நாசி நுனி வந்த
துளியொன்று நிலம் நனைத்த
நாளில்தான் மறைந்து போனாளவள்!

கண்ணுயர்த்தி நிமிர்ந்த போது,முகம்
தொட்டுச் சிதறியதோர் துளியில்
அவளின் முகம்!

இப்போது நிலம் விழுந்த துளி,
நில நாக்கை உவர்க்கச் செய்திருக்கலாம்.

-♠ராஜூ♠

உறைந்த கடிதம்..

துயிலில்லா இரவுகள்,
புறங்கை தாங்கிய
முகவாய்களுடன்
நீள்கின்றன.
நகம் கடித்தலிலும்
பொழுதுகள் கழியத்தான்
செய்கின்றன.
மௌனம் களைந்து..
உனக்கான எழுத்துகளை,
பேனாவிலென் ரத்தம் ஊற்றி
மேகங்களின் உடலில்
எழுத முயல்கிறேன்.
பேனாவினுள் அதுவும்
உறைந்து நிற்கிறது.
என் காதலைப் போலவே..!
கூடவே கடிதமும்.

-♠ராஜூ♠

உதிரா(ர)க் காதல்..!

உறவுகளனைத்தும் உதிர்ந்து போதும்,
நீ மட்டும் மறக்க மறுக்கிறாய்
என் காதலெழுந்து தாண்டவமாட.
எனக்கு கடந்த காலமே இல்லையென
கண்ணீர் கொண்டு நுரை பொங்க
அழுத்தித் துடைத்தெறிந்தும்.

என் மனதைக் கொய்யும்
வாலிப வாசனைகளோடு
கூடிய நினைவுகளுடன்
நீ நகர்ந்து செல்கிறாய்.
மனச்சுவரின் குறுக்கே ஓடியோடி
ஒளிந்து விளையாடுகிறாய்.

விசாரணைகளின்றி நீ
கொடுத்த சொற் தண்டனைகளின்
பெயரில் ஏற்பட்ட வடுக்களில்
வலியெனும் குறுக்கு விசாரணைகள்
இன்றளவும் இருக்கின்றன.

வக்கீல் வேண்டாம் வாதாட,
என் காதல் உள்ளது.காலத்தின்
தீர்ப்பை வெல்ல..
உன்னுடையதையும்..!
-♠ராஜூ♠

காதல் இலர் தினம்.....

காதலருக்கு
தினம் தினம்.

காதல் இலருக்கு
ஒரு தினம்.
--------------------------------

கண்களின்
புணர்ச்சியில்
கருக்கொண்டது
காதல்.
-------------------------------------

காதல்
செய்த பாவம்
கல்யாணம்
செய்தால் போகும்
-----------------------------------
எவர் அறிவார் எவர் அறிவார்
காதல் வரும் நேரம்
காலன் வரும் நேரம்
எவர் அறிவார் எவர் அறிவார்
---------------------------
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையராய்
காதல் இருந்தும் இல்லாமல்
கலியுக காதலர்.

எல்லாம் காதல் மயம்.!

அன்புள்ள பிரியாவுக்கு,
உனக்கு இது நான் எழுதும் 22 வது கடிதம்.ஆம்,21 கடிதங்களை உன்னிடம் கொடுக்கவே இல்லை என்பது எனக்கும் என் பேனாவுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.நாம் காதலிக்க ஆரம்பித்து இன்று வரை ஆறு வருடங்கள்,மூன்று மாதம் ஆகின்றது.படிக்கும்போது அனைத்துப் பாடங்களையும் ஒரே அட்டம்ப்டில் தூக்குபவனையே ரசித்த பெண்களின் மத்தியில் "அரியரைத் தூக்குவதே அரிது" என்றிருந்த என்னை ஏன் காதலித்தாய்..? அன்று முதல் தேடிப் பார்க்கின்றேன், என்னிடம் உன்னை ஈர்த்தது எதுவென்று.எனக்கு மட்டும் தெரியவில்லை. நோட்புக்குகளில் நீ “பிரியா செந்தில்” என்றெழுதி மறைத்து வைத்திருந்ததைப் பார்க்கும் நேரமெல்லாம் மௌனமாக அழுதிருக்கின்றேன்.

இந்த ஆறு வருடங்களில்தான் எத்தனை ஊடல்கள்,சண்டைகள்,குடும்பச் சங்கடங்கள்...? அதனால்தான் முடிவெடுத்துவிட்டேன் உன்னை விட்டு பிரியலாம் என்று.எப்போது பார்த்தோம்.பழகினோம்.எல்லாம் இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தாணியாகவே இருக்கின்றது. மதுரையில் நாம் சுற்றாத இடங்கள் பாவம் செய்திருக்கக் கூடும்.அந்த நினைவுகள் போதும். அவற்றை தின்று விழுங்கிக் கொண்டே இருந்துவிடுவேன்.

உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியுமா..? என்ற‌ கேள்வி இருப்பின், அதற்கு 'இல்லை'என்பதுதான் எனது பதிலாக இருக்கும்.என்ன செய்ய,நான் கோழைதான். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்.? என நீ கேட்காவிட்டாலும் நான் என் பதிலைச் சொல்லிவிடுகின்றேன்.

பயம்தான். இனி நம் வாழ்க்கை என்னவாகும் என்கிற ஒரு இனம்புரியாத பயம்தான்.என் வீட்டிலோ நான் காதலை சொன்னாலும் சொல்லாவிடினும் ஒரே நிலைமைதான்.ரேசன்கார்டில் மட்டுமே என்வீட்டில் வாழ்கின்றேன். ஆனால், உன் வீட்டில் உன் அப்பாவோ சொந்தங்களோ இந்த ஜென்மத்தில் சம்மதிக்கமாட்டார்கள். உன் பெற்றோர்களைப் பழித்து, குற்ற உணர்ச்சியோடு வாழும் வாழ்வு எனக்கு பிடிக்கவில்லை.? நான் உன் பெற்றோரின் மனதை உடைக்க விரும்பவில்லை என்பதே பிரதான காரணம். நீ ஆயிரம் சமாதானங்கள் சொன்னாலும் இதுதான் என் பதில்.அது என்னவோ தெரியவில்லை,காதலிக்கும் போது இதைப் பற்றிய சிந்தனை வரவே இல்லை.நாமும் சினிமாக் காதலர்களைப் போல இருந்து விட்டோம்.வாழ்க்கைப் பற்றிய பயம் வரும்போதுதான் இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது. பிரிந்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா..? எனில்,இந்த நானோசெகண்ட் வாழ்க்கையில் "எல்லாம் சரியாகி விடும்". இதை ஏனோ என்னால் உன்னிடம் நேரில் சொல்ல முடியவில்லை. அதனால்தான் இந்தக் கடிதம்.

இப்படிக்கு,
செந்தில் வேல்.

இப்படி ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு,சென்னையிலிருந்து பாண்டியனில் வரும் தன் காதலியான பிரியாவைப் பார்க்கச் சென்றான் செந்தில்.கோச்சிலிருந்து இறங்கும் அவள் கண்களின் தேடலுக்கு பதிலாக,அவள் முன் சென்று நின்றான்.அவனைப் பார்த்து அவள் விட்ட் ஒற்றைத்துளி கண்ணீரில்,அந்தக் கடிதத்திற்கு தன் பேன்ட் பாக்கெட்டிலேயே 22 வது முறையாக‌ கல்லறை வைத்தான்.

-♠ராஜூ.♠

நன்றி..!

முன்னாள் காதலியை
ஒவ்வொரு முறையும்
கணவனுடன்
எதிரில் பார்க்க நேரும் போதெல்லாம்,
வராத அழைப்பை ஏற்கும்
தொனியில் செவியில்
அழுத்தும் செல்ஃபோன்.

அவள் என்னைத் கடந்து்
சென்ற பின், மெல்ல
முகம் தூக்கித் திரும்பி
உற்று நோக்கத் தூண்டும்
செல்லரிக்கா காதல்
கொண்ட மனம்.

அவள் கணவனை தனியே
பார்க்க நேரும் போது,
பற்றிக்கொண்டு வரும்
பொறாமையுடன்
கலந்த கோபம்.

வீடு வந்ததும் மனைவியின்
சிரிப்பிலும், உணவு பரிமாறும்
அந்த அன்பிலும் பட்டுத்
தெறிக்கின்ற என் பயம்
கலந்த இயலாமை.

கழுத்தைத் தாவி தொற்றிப்
பிடித்துக் கொள்ளுமென்
குழந்தையின் பிஞ்சுக்
கைவிரல்களால் தூண்டப்படும்
பொறுப்புணர்ச்சி.

தனியறையில்,படித்து
பாதுகாக்கப்படும்
என் காதல் கலந்த
கடிதக்காகிதங்கள்,
வாழ்த்தட்டைகள்.

இவையனைத்திற்கும்
நன்றி சொல்ல கடமைப்
பட்டிருக்கிறேன்,ஒவ்வொரு
முறையும் எனக்கென்
பழைய காதலை
நினைவுப்படுத்துவதற்காக..!

Next மீட் பண்ணுவோம்
♠ராஜூ♠

காதல் கடிதங்கள்..


கனவே கனவே
என் கனவெல்லாம் நீயே...

அசுரனே வந்தாலும்
அசராத என்னை
சிறு புன்னைகையாலே
வெட்டி சாய்த்தாய்...

நீ நடக்கும் வீதியில்
தூசியே இருக்காது
நீ வருவாய் என்று
நூறு முறை
நான் கடந்து போவதால்...

நீ இருக்கும் இடத்தில்
வெயில் இருக்காது
நிழலாய் உன்னை
நான்
தொடருந்து வருவதால்...

நீ தூக்கி ஏறியும்
குப்பைக்குக்கூட
கால் இருக்கிறது
என் அறையில் எப்படியோ
அது குடி புகுவதால்...

என் வீட்டு கண்ணாடி
பொய் சொல்கிறது
அதில்
என்னைக் காணாமல்
உன்னைக் காண்பதால்

உன் பார்வை தூண்டிலில் தவிக்கும் மீன் நான்
ஆனால் இன்னும்
தூண்டிலைத்தான் காதலிக்கிறேன்

என்னைத் துண்டு
துண்டாக்கிவிட்டு நீயோ
தூரமாய் போகிறாய்...

தூக்கத்தைத் தொலைத்து நான்
திருடனாய் விழிக்க
உன்னிடம் கொடுக்காத
என் காதல் கடிதங்கள் மட்டும்
சுகமாய் தூங்குகின்றன
என் படுக்கை அறையில்...!!!

காதல் செரிக்காது...!



நான் உன்னைக் காதலிக்கிறேனென்று
உன்னிடம் வரும்போது
நீ பார்க்கும் பார்வையையும்
முடியாதென வந்து
விழப்போகும் சொற்களையும்
அப்படியே விழுங்கிவிடு.

என்னைப்பார்த்து
இதுவரை நீ சிரிக்கவேயில்லை
என்பதை மட்டும்
நினைவில் பொருத்திக்கொண்டு
அமாவாசை இருட்டில் சிரிப்பது
போலொருமுறையேனும்
சிரித்து விடு.

பாட்டியிடம் இரவுக்கதைகேட்கும்
ஒரு சிறுமி போல், உன்னை
நினைத்துக் கொள். நான்
காதல் சொல்லி விட்டுப்
போகின்றேன்.

சொல்லி முடித்தபின்
மறுத்தாலும். .,
காதல் ஏற்படுத்திக்கொடுத்த
உணர்வும் நிகழ்வும்
உன்னைப் பின்தொடர்ந்து
வந்து கொண்டேதானிருக்கும்
பின்னொருநாளில்,
அக்காதலை நாமிருவரும்
சேமித்து வைக்காமல்
செரித்து விட்டாலும் கூட..!

Next மீட் பண்ணுவோம்
♠ராஜூ♠

குறிப்பு: இன்று முதல் இங்கு(ம்)..!